ட்ரெண்டிங்

எடப்பாடியில் 2.76 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நிறைவு – திறந்து வைத்தார் இபிஎஸ் !!!

 

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில்,பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு அடிப்படை வசதிகள் ரூ.2.76 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்தப் பணிகளை,தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி கே.பழனிச்சாமி,பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

2023 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டப்பணிகள், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொங்கணாபுரம், நங்கவள்ளி, பக்கநாடு, இருப்பாளி, சாணார்பட்டி, சூரப்பள்ளி, வனவாசி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், ஆழ்துளைக் கிணறு மற்றும் பைப் லைன் இணைப்புகள், புதிய சாலை அமைப்புகள், பழைய சாலைகள் புதுப்பித்தல் போன்ற பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில்

கிராமப்புறங்களில் குடிநீர் பற்றாக்குறை, இந்த நிதியிலிருந்து அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மக்கள் பயன்பாட்டிற்கு பெரும் நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், போக்குவரத்து சிரமங்களுக்கு தீர்வாக சாலை அமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு அன்றாடப் பயணத்தில் சுலபம் ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருவதாகவும், மக்கள் நலனுக்கான தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

மேலும் எதிர்காலத்தில் தொகுதியின் ஒவ்வொரு கிராமமும் அடிப்படை வசதிகளில் முன்னேற்றம் அடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.