ட்ரெண்டிங்

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செம்மண் கொள்ளை! 

சுற்றுச்சூழல் சமநிலைக்கான உயிர் ஆதாரங்களான வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த வளங்கள் அபகரிக்கப்பட்டால் நொடியும் தாமதமின்றித் தடுக்கப்பட வேண்டும். மேட்டூரில் நடந்து வரும் ஒரு கொள்ளை தடுக்கப்படாததால் எண்ணற்ற மரங்கள் மடிவதுடன் நூற்றுக்கணக்கான பறவை இனங்களும் அழிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளனர். 

மேட்டூர் அணையின் வலதுக்கரையில் அவசர கால வெள்ள நீர் போக்கியையொட்டி, அரியவகை மரங்களுடன் அடர்ந்த காடு உள்ளது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பும் போது, பொதுப்பணித்துறை கண்காணிப்பில் வந்துவிடும். 

இந்த காட்டில் வித விதமான வெளிநாட்டு பறவைகள், காலங்காலமாக, கூட்டங்கூட்டமாக வந்துச் செல்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் கூடுக்கட்டி வசிக்கின்றனர். இந்த நிலப்பரப்பில் மட்டுமே வாழும் அரிய வகை பறவை இனங்களும் உள்ளன. 

ஆனால் இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த பறவைகளைப் பார்க்க முடியாது. இவற்றின் கீச்சு குரல்களைக் கேட்கவும் முடியாது. காரணம், பறவை இனங்கள் கூடுக்கட்டுவதற்கு அங்கே மரங்கள் இருக்காது. இதற்கு காரணம், கண் முன்னே நடந்துக் கொண்டிருக்கும் செம்மண் கொள்ளை. இங்கு செழித்திருக்கும் வளமான செம்மண், கருணையே இன்றி பல அடி ஆழத்திற்கு அள்ளப்பட்டு அபகரிக்கப்பட்டு வருகிறது. 

வேர் பற்றி இருக்க பிடிமண் இல்லாமல் ஒவ்வொரு மரமாக விழுந்து கருத்து மரித்து வருகின்றனர். தனித்துவமிக்க இந்த காட்டில் இருந்து விலை மதிப்பே இல்லாத செம்மணை அள்ளிச் சென்றுள்ளது சட்டவிரோத கும்பல். இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது வனத்துறையினர் கூறுகையில், செம்மண் கொள்ளை குறித்து தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.