ட்ரெண்டிங்

சேலத்தில் சிபிஐ கட்சியின் மாநில மாநாடு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..!!!

 

சேலம்,ஆக.15: சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. "வெல்க ஜனநாயகம்"என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் 16 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 18 ஆ ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 

 

தொடக்க விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநாட்டை மூத்த நிர்வாகி அமர்ஜித் கவுர் தொடங்கி வைத்தார். அப்போது திருப்பூரில் இருந்து செம்படை வீரர்களால் எடுத்துவரப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமாண்ட கொடி மற்றும் தியாக சுடர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

பின்னர் மாநாட்டு திடல் அருகே உள்ள அண்ணல் காந்தியின் சிலைக்கு தேசிய செயலாளர் நாராயணா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மாநாட்டு வளாகத்தில் தேசியக்கொடியை கட்டுப்பாட்டு குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பழனிசாமி, தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் ஏற்றி வைத்தனர். 

 

இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் கே.நாராயணா, ஆனிராஜா, மூர்த்தி , வெங்கடாஜலம் உள்ளிட்ட நிர்வாகிகள் அரசியல் விளக்கவுரை நிகழ்த்தினர்.

 

அதன் தொடர்ச்சியாக, 16 ஆம் தேதி மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெறும் "வெல்க ஜனநாயகம்" என்ற எழுச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் கூட்டணி கட்சித்தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர். 

 

தொடர்ந்து, 17 ஆம் தேதி மாநாட்டில் தீர்மானங்களும், 18 ஆம் தேதி மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர்.