ட்ரெண்டிங்

2026-ல் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- இ.பி.எஸ். பேட்டி!

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 14) திறந்து வைத்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. கூட்டணியுடன் முரண்பாடு உள்ளதாக தகவல் வந்துக் கொண்டிருக்கிறது; முதலில் அவர்கள் கூட்டணியை சரி செய்து கொள்ளட்டும். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக 2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும்; தனித்து ஆட்சி அமைக்கும்.


சேலம் மாநகராட்சியில் குறைபாடுகளைப் பற்றி மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது திட்டமிட்டு தி.மு.க. கவுன்சிலர்கள் தாக்குகிறார்கள். குறைகளைக் சொல்லக்கூடாது என்று சொல்கிறார்கள், சொல்ல முற்பட்டபோது பிரச்சினை நடைபெற்றது.தி.மு.க. பெண் கவுன்சிலர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து யாதவமூர்த்தி தாக்குகிறார் என்றால் எந்த அளவிற்கு அராஜகம் நடக்கிறது.

மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதற்கு தான் மாநகராட்சி கூட்டம். அங்கு கூட பேசக்கூடாது என்றால் அராஜகமும், ரவுடிசத்திலும் ஈடுபடுகின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அடிபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது தான் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலை. அ.தி.மு.க. சுற்றுப்பயணம் எவ்வளவு விறுவிறுப்பாகவும், மக்கள் மத்தியில் எழுச்சியுடன் மக்கள் பங்கேற்கிறார்கள் என்று அனைவருக்கும் காட்டுங்கள்.

தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துவிட்டார்கள்.
மக்களுடைய எழுச்சி பார்க்கும்போது தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு காரணம் தெரிகிறது.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை, சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகம் இருக்கிறது. தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என்று மக்கள் கொந்தளிப்புடன் இருப்பது அ.தி.மு.க. சுற்றுப்பயணத்தின் போது தெரிகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வேடிக்கையாக உள்ளது; முதல்வர் விளம்பரம் செய்ய வேண்டும், மக்களை கவர்ச்சிகரமாக பேசி இழுக்கவேண்டும். அடுத்தாண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள்.

நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யவில்லை. விளம்பரத்தாள்களில் நிறைய செய்ததாக வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் தி.மு.க. ஆட்சியில் மக்களிடையே குறைகள் அதிகம் உள்ளது. நான்கரை ஆண்டுகாலம் மக்களை பற்றி சிந்திக்காமல் அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தலையொட்டி, விளம்பரத்தால் என்னென்னவெல்லாம் செயல்படுத்தினோம், குறைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக வீடு வீடாக சென்று கொடுத்து செல்போன் எண் குறிக்க சொல்கிறார்கள்; இந்த எண் தி.மு.க. ஐடி விங்கிற்கு செல்லும், அதற்காகத்தான் இந்த வித்தையை செயல்படுத்துகிறார்கள் .மக்களுக்கு நன்மை செய்வதற்காக திட்டம் இல்லை..

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மக்களிடம் உள்ள குறைகளை எழுதி கொடுத்து பெட்டியில் போடுங்கள், ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். மக்களுடைய பிரச்சினைகள் தீரும் என்று கூறினார்.அவ்வாறு பிரச்சினையை தீர்த்து இருந்தால் எப்படி இவ்வளவு பிரச்சினை இருக்கும். மக்களை ஏமாற்றுவதற்காக போடும் நாடகம்.
அரசு அதிகாரிகள் பயன்படுத்தினால் தான் தொலைபேசி எண்ணை கொடுப்பார்கள்; மற்றவர்கள் கேட்டால் மக்கள் கொடுக்க மாட்டார்கள். தந்திரமாக மக்களை ஏமாற்றி மக்களின் செல்போன் எண்ணை வாங்கி, ஐடி விங் இடம் கொடுத்து மக்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வருவார்கள்; இன்னும் தேர்தலுக்கு காலம் அதிகம் உள்ளது. தேர்தல் நேரத்தில் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும். பலம் பொருந்திய கூட்டணியாக அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்படும். மற்ற கட்சிகளிலும் கூட்டணி குறித்து முடிவு செய்யாமல் உள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளது. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது; நிறைய கட்சிகள் கூட்டணியில் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது; அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி ,வெற்றி கூட்டணி அமையும்.

கனிம வளத்தில் ஊழல் நடைபெறுவது குறித்து அ.தி.மு.க. சட்டப்பேரவையில் பேசியது. வெளிமாநிலங்களுக்கு கனிம வளம் அதிகம் கடத்தப்படுகிறது. இதைப் பற்றி தி.மு.க. அரசாங்கத்திற்கு கவலையில்லை. கனிம வளத்தில் தான் அதிகம் கொள்ளையடிக்க முடியும் என்று கொள்ளையடிப்பதற்காக பகிரங்கமாக செய்து வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த துறையில் முறைகேடுகள் நடந்து உள்ளதோ அதையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.