இந்திய ரயில்வேத்துறையில் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தெலங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் கடும் அவதியும் அடைந்தனர்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் போது பேசிய சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, குரூப் 'சி' பதவிகளுக்கான ரயில்வே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு அண்மையில் தேர்வு நடத்துவதில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள்தான் காரணம் என சொல்லபடுவது உண்மை என்றால் அதன்மீது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?. உத்தரபிரதேசத்தில் கிழக்கு மத்திய ரயில்வேயின் 26 ரயில்வே அதிகாரிகள் துறைத் தேர்வின் வினாத்தாள்களை கசியவிட்டதாகக் கூறி சிபிஐ கைது செய்த அதிகாரிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.



