சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குட்டப்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, இ.ஆ.ப தலைமையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் இன்று (ஜூன் 26) நடைபெற்றது.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்களில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் மக்கள் சந்திப்பு திட்டம் நடைபெறும் குட்டப்பட்டி ஊராட்சியானது மேட்டூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
குறிப்பாக, குட்டப்பட்டி ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தனித்தனியாக மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சரால் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வி கற்றல் மூலம் சமூக வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் தனிமனித பொருளாதார வளர்ச்சியும் அடைய முடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து தங்களது குழந்தைகளை உயர்கல்வி வரை முழுமையாக படிக்க வைத்து வாழ்வில் முன்னேற்றம் அடைவதை உறுதி செய்திட வேண்டும். சேலம் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு முடித்துள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயர் கல்வி பயில தமிழ்நாடு அரசும், மாவட்ட நிருவாகமும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.
மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உயர்கல்வி வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவ, மாணவியர்கள் கட்டுப்பாட்டு அறையின் 97888-58931, 99420-31640 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும், மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கல்விக்கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் தங்கள் அருகில் உள்ள வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். குறிப்பாக அரசின் திட்டங்கள் குறித்து துறைகளின் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும். அதேபோன்று குட்டப்பட்டி பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டா, ஆதிதிராவிடர் நத்தம் பட்டா, உட்பிரிவு பட்டா மாறுதல் உட்பிரிவற்ற பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஒருங்கிணைந்த சான்றிதழ். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூபாய் 92.69 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்டங்களை பெற்றுள்ள பயனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வருவாய்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை, பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.


