ட்ரெண்டிங்

முன்னாள் எம்.பி. மீது பண மோசடி புகார்! 

சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பா.ம.க.வின் மாநில துணைத் தலைவருமான தேவதாஸ் மீது ரூபாய் 50 லட்சம் மோசடி செய்ததாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தொழிலதிபர் கொடுத்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாநகரம், செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் ஸ்பின்னிங் மில்களுக்கு சணல் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். முன்னாள் எம்.பி. தேவதாஸ் மீது அவர் அளித்த புகார் மனுவில், முன்னாள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் தேவதாஸ் நிறுவனத்திற்கு சணல் பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளேன். ரூபாய் 50 லட்சம் பணத்தை வாங்கிய முன்னாள் எம்.பி. தேவதாஸ் பணத்தை திருப்பித் தராமல் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். 

ரூபாய் 50 லட்சம் பணம் கொடுத்த போது எனக்கு ரசீது ஒன்றை கொடுத்திருந்தார். பின்னர் ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலை ஒன்றை கொடுத்துவிட்டு ரூபாய் 50 லட்சம் பெற்றதற்கான ரசீதை திரும்பப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். தேவதாஸ் ஸ்பின்னிங் மில்லின் இயக்குநர்கள் ஆறு பேருக்கும் மோசடியில் தொடர்புள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்பப் பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.