ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரிப்பு!

தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 16,000 கனஅடியாக நீடித்து வருகிறது. காவிரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தொடர்ந்து ஏழாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

இதன் காரணமாக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 22) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,638 கனஅடியில் இருந்து 14,159 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.14 அடியில் இருந்து 55.64 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 21.54 டி.எம்.சி.யாக உள்ளது. 
 
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பாசனத்திற்கான நீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.