ட்ரெண்டிங்

நீதிமன்றத்தில் சரணடைந்த இளைஞர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த ஆகஸ்ட் 2- ஆம் தேதி அன்று இரவு 10.00 மணிக்கு ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடந்துச் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது, அவ்வழியே மது அருந்திய நிலையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 27) என்ற இளைஞர், கோபாலிடம் தகராறு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, பாட்டிலால் கோபாலைத் தாக்கியுள்ளார். அத்துடன், ரூபாய் 500 பணத்தைப் பிடிங்கிக் கொண்டு நவீன்குமார் தப்பித்து ஓடிவிட்டார்.

 

இதையடுத்து, கோபால் உடனடியாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நவீன்குமாரைத் தேடி வந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 25- ஆம் தேதி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நவீன்குமார் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (செப்.05) ஆட்டையாம்பட்டி காவல்துறையினர், நவீன்குமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், நவீன்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

 

அதைத் தொடர்ந்து, நவீன்குமாரை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு இன்று மாலை நீதிமன்றத்தில் நவீன்குமாரை ஆஜர்படுத்தும் காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.