ட்ரெண்டிங்

6 கேமராக்களுடன் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு! 

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம் குறித்து 6 கேமராக்கள் பொருத்தி வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ளது புதுகாளிக்கவுண்டனூர். இங்கு டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமசாமி மலை உள்ளது. ராமசாமி மலை 1,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டு மாடு, மான், ஆடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதுக்காளிக்கவுண்டனூர் சிவானந்தம் என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை கடித்தது. நாய்களின் குறைத்த சத்தத்தை கேட்டு வெளியே வந்த சிவானந்தம் சிறுத்தையை விரட்டினார். 

இந்த சம்பவம் தொடர்பாக சிவானந்தம், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்தனர். 

சிவானந்தம் வீடு அருகே 2 கேமராக்களையும், மற்ற பகுதிகளில் 4 கேமராக்களையும் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 15 நாட்களுக்கு முன்பு அரசமரத்தூர் காட்டுவளவு பகுதியில் நாய்களை சிறுத்தை கவ்வி சென்றுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வெள்ளாறு ஊராட்சி சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.