உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்றும் (ஏப்ரல் 16) மற்றும் ஏப்ரல் 17 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் வகையில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கள ஆய்வின்போது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களின் இடங்களுக்கே சென்று குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமானது. இன்றையதினம் காலை சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் தொடங்கியுள்ளது. மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேட்டூர் வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் இன்றைய தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள் பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், இன்றையதினம் மேட்டூர் வட்டம், நங்கவள்ளி, பெரியசோரகை நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நியாய விலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும். அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்தும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொது விநியோக திட்டப்பொருட்களின் இருப்பு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நங்கவள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு தீ விபத்து மற்றும் தடுப்புப் பணிகளுக்கான பதிவேடுகள், இயற்கை இடற்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணியின்போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள், தீ தடுப்பு கருவிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நங்கவள்ளி வேளாண் விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களில் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வீரக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் கல்வித்திறன். வருகைப் பதிவேடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதே போன்று, குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு ரேபிஸ் வெறி நோய் தடுப்பூ சிகள் மற்றும் பாம்புக்கடி விஷ முறிவு மருந்துகள் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், மருத்துவமனையை தூய்மையாகப் பராமரிக்கவும், சிகிச்சை பெற வருகைதருபவர்களுக்கு விரைவான சேவை வழங்குவதை உறுதிபடுத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும் மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும் , சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.
இன்றைய ஆய்வின்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் இப்பகுதிகளில் தங்கி நாளைய தினம் அதிகாலை 6 மணி முதல் இவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பால் கொள்முதல் நிலையங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


-SXgDfGgJfO.jpg)