ஆன்மிகம்

சேலம் கோயில்களில் பூச்சாட்டுதல்களுடன் தொடங்கியது ஆடித் திருவிழா!

சேலம் கோயில்களில் பூச்சாட்டுதல்களுடன் தொடங்கியது ஆடித் திருவிழா! 

ஆடி மாதம் என்றாலே, சேலம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் திருவிழா களைக்கட்டுவது வழக்கம். ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா சுமார் ஒரு மாதம் நடைபெறும். சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும், நாள்தோறும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். 

அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆடித் திருவிழா, சேலம் மாநகரில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று (ஜூலை 25) செவ்வாய்க்கிழமை அன்று இரவு 07.00 மணிக்கு பூச்சாட்டுதலுடன், ஆடித் திருவிழா தொடங்கியது. இதில் 200- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, உதிரி பூக்களை வழங்கி, வழிபட்டு சென்றனர். 

அதன் தொடர்ச்சியாக, சேலம் குகை மாரியம்மன் கோயில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில், அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயில், அம்மாப்பேட்டையில் உள்ள காமராஜர் நகர் காலனியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில், பலபட்டறை மாரியம்மன் கோயில், சத்யா நகரில் உள்ள மாரியம்மன் கோயில் என மாநகரில் அமைந்துள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பூச்சாட்டுதலுடன் ஆடித் திருவிழா தொடங்கியுள்ளது. 


இதனால் சேலம் மாநகரத்தில் உள்ள மாரியம்மன் கோயில்கள் வண்ண மின் விளக்குகள் ஜொலிக்கிறது. மேலும், நாள்தோறும் பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.