ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழக- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15,000 கனஅடியில் இருந்து 16,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இன்று (ஆகஸ்ட் 21) காலை 08.00 மணிக்கு நிலவரப்படி, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் திறப்புக் குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,159 கனஅடியில் இருந்து 13,638 கனஅடியாக அதிகரித்துள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக, சுரங்க மின்நிலையம் வழியாக வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 54.70 அடியில் இருந்து 55.14 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்இருப்பு 21.20 டி.எம்.சி.யாக உள்ளது. 

அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதாலும் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதனிடையே, காவிரி நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க ஆறாவது நாளாக த் தடை விதிக்கப்பட்டுள்ளது.