ட்ரெண்டிங்

விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டும்! 

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை, கடலூர் பிரதானசாலை அருகில் 100% வாக்குப்பதிவினை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீ. பாலச்சந்தர் தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 100% வாக்குப்பதிவினை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு தேர்தல் பிரச்சார உத்திகள் கையாளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் பிரச்சார வாகனம் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியின் தெருக்களிலும், வீதிகளிலும் அதிக மக்கள் கூடும் இடங்களிலும், சந்தை பகுதிகளிலும் 100% வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீ.பாலச்சந்தர் தொடங்கிய போது, சேலம் நாடாளுமன்ற தேர்தலின்போது சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அதிக அளவு சத்தத்துடன் இருக்கக்கூடாது என்றும், அவ்வாறு ஒலிபெருக்கியை பயன்படுத்தும் போது உரிய அனுமதி பெற்று வாகன பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நடப்பு நாடாளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், அவரை சார்ந்த நபர்கள் வாகன பிரச்சாரத்தின் போது அதிக சத்தம் எழுப்பக் கூடிய ஒலிபெருக்கியாக இருக்கக்கூடாது. வயதானவர்கள், மாணவ, மாணவியர்கள், இயலாதவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு, இடையூராக இருக்கும் காரணத்தால், தேர்தல் ஆணையம் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அரசியல் அமைப்புச் சட்டம் 324 விதியின் படி ஒலிபெருக்கியை பயன்படுத்திட வேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களிலும் பிரச்சார வாகனங்களிலும் ஒலிபெருக்கியை பயன்படுத்தும் போது அதற்கான உரிய அனுமதி பெறவேண்டும். எந்த வகையான வாகனத்தில், எந்த வகையான ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

இரவு 10.00 மணிக்கு மேல் காலை 06.00 வரை ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. ஓட்டுப்பதிவு தினத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஒலிபெருக்கி பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்தும் முறையை அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், அவரை சார்ந்த நபர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஒலிபெருக்கியை பயன்படுத்தும் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீ.பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.