ட்ரெண்டிங்

மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர்! 

சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி, செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 05) நடைபெற்று வரும் மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் முகாமினை நேரில் பார்வையிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் மின்நுகர்வோர்கள் தங்களது மின்இணைப்பில் மின் கட்டண குறைபாடு, பழுதடைந்த மின் மீட்டர் மாற்றம், குறைந்த மின்னழுத்தம் மற்றும் பழுதான மின் கம்பம் மாற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கும் வகையில் சேலம் மற்றும் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் மனுக்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம் இன்று காலை முதல் மாலை 05.00 வரை நடைபெறுகிறது. 

குறிப்பாக, சேலம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் நகரம், உடையாப்பட்டி, அன்னதானப்பட்டி, ஆத்தூர் மற்றும் வாழப்பாடி ஆகிய கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்கு எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் தொடர்புடைய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது.