சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மானிய விலையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியின் செயல்பாடுகள் குறித்து நிறைந்தது மனம் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டகளை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்.
குறிப்பாக, வேளாண் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் மானியம் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கும் திட்டம், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைக்கும் திட்டம். சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் திட்டம் மற்றும் இ-வாடகை நில மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பான முறையில் செல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டத்தின் கீழ் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த பழனிமலை என்பவரின் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சூரிய கூடார உலர்த்தியில் வேளாண் விளைபொருட்களை உலர வைப்பதன் மூலம் அவற்றை உலர்த்துவதற்கான கால அளவு, கூலியாட்கள் செலவு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு ஆகியவை குறைகிறது. விளைபொருட்களை சுகாதாரமான முறையில் இயற்கை தன்மை மாறாமல் உலர்வதால் அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், பூஞ்சைக்காளான் படிவதும் தவிர்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 344 விவசாயிகளுக்கு ரூபாய் 7.04 கோடி மானியமும், தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்குதல் திட்டத்தில் 1,076 விவசாயிகளுக்கு ரூபாய் 15.54 கோடி மானியமும், கிராம வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல் திட்டத்தில் 60 பயனாளிகளுக்கு ரூபாய் 4.34 கோடி மானியமும், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டத்தில் 27 பயனாளிகளுக்கு ரூபாய் 63.80 லட்சம் மானியமும், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைத்தல் திட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ரூபாய் 47.40 லட்சம் மானியமும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் மானியம் வழங்கும் திட்டத்தில் 135 விவசாயிகளுக்கு ரூபாய் 2.59 கோடி மானியமும், சூரிய ஒளி மின்வேலி மானியத்தில் அமைக்கும் திட்டத்தில் 3 விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின்வேலி அமைத்து ரூபாய் 2.96 லட்சம் மானியமும், இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்திட 3 பயனாளிகளுக்கு ரூபாய் 60 லட்சம் மானியமும், இ வாடகை நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்கள் மூலம் 8,65,581 மணி நேரம் உழவுப்பணி மற்றும் நிலசீர்திருத்தப் பணிகள் மானிய விலையில் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,699 விவசாயிகளுக்கு ரூபாய் 34.22 கோடி மானிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக முழு விவரங்களைப் பெற்று பயனடைய மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் செயல்படும் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வட்டார அளவில் வேளாண்மை பொறியியல் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

-fronx-cng-1GbdkIYLq1.jpg )
