ட்ரெண்டிங்

செல்லப்பிராணிகள் கடித்தால் உடனே தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்! 

 

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்க்கடி மற்றும் பாம்புக்கடிக்கான விஷ முறிவு மருந்துகள், அவசரகால மருந்து, மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 02) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்விற்கு பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, ரேபிஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திட தங்களது செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று, இதனை பராமரிப்பவர்களும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும். வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை முதலிய வீட்டு விலங்குகளுக்கு கால்நடை மருத்துவர்களிடம். மேற்குறிப்பிடப்பட்ட தடுப்பூசிகளை உரிய காலத்தில், அனைத்து தவணைகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். 

செல்லப் பிராணிகளுக்கு ஏற்கனவே ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், அவைகள் கடித்தால் உடனடியாக ஆண்ட்டி ரேபிஸ் தடுப்பூசிகளை 4 தவணைகள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். 
மேலும், காயம் ஆழமாக இருந்தால் காயம் உள்ள இடத்தில் இம்யூனோக்ளோபின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது. தெரு நாய்கள், செல்லப் பிராணிகள், குரங்கு, ஆடு, மாடு, குதிரை, நரி, வௌவால் உள்ளிட்ட விலங்குகள் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். 

விழிப்புணர்வின்றி, நாய் அல்லது மற்ற பிராணிகள் கடித்த பிறகு, ஆண்ட்டி ரேபிஸ் தடுப்பூசிகள் போடாமல் இருக்கும்போது தான் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. நாய் கடித்தவுடன், கடித்த இடத்தில் சோப்பு போட்டு தண்ணீரில் 15 நிமிடம் வரை நன்றாக கழுவவும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று ஆலோசனை பெறவும், மருத்துவமனைகளை அணுகாமல் அலட்சியமாக இருக்கக்கூடாது, கடித்த இடத்தில் எருக்கம்பால் அல்லது பச்சிலை சாறு போன்றவற்றை தடவக் கூடாது. மந்திரித்தல், தாயத்து கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான வெறிநோய் தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. எனவே, நாய்க்கடி போன்ற நிகழ்வுகள் நடந்தவுடன் காலம் தாழ்த்தாமல் உரிய தவணை தடுப்பூசிகளை குறித்த காலத்தில் தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.