ட்ரெண்டிங்

மாணவியின் கண் பார்வை பாதிப்பு....தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

 

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப் பள்ளியில் 5- ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 22- ஆம் தேதி வகுப்பறையில் மாணவி இருந்த போது, தலைமையாசிரியர் முருகவேல் (வயது 57), பாடம் தொடர்பாக கேள்வி கேட்டு அவர் வைத்திருந்த மூங்கில் குச்சியைத் தூக்கி வீசி உள்ளார். அப்போது 10 வயது மாணவியின் இடது கண் மீது குச்சி விழுந்தது.

 

இதையடுத்து, உடனடியாக அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கண்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இடதுகண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோருக்கு அறிக்கை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கடந்த ஜனவரி 24- ஆம் தேதி தலைவாசல் காவல்துறையினர் முருகவேல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 

இதையடுத்து, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், தலைமையாசிரியர் முருகவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.