சேலம் மாவட்டம், நங்கவள்ளி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்க்கடி மற்றும் பாம்புக்கடிக்கான விஷ முறிவு மருந்துகள், அவசரகால மருந்து, மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 02) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் உடனுக்குடன் வழங்கிடும் வகையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தியும், அவசரகால மருந்து, மாத்திரைகளின் இருப்பினை உறுதி செய்திடவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான வெறிநோய் தடுப்பூசி இருப்பு குறித்து மருத்துவத் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தின்போது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் நங்கவள்ளி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசிகள் மற்றும் பாம்புக்கடி விஷ முறிவு மருந்துகள் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கும் வகையில் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தகவல் பலகையில் தினசரி தடுப்பூசிகளின் விவரங்கள் குறிப்பிடப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையை தூய்மையாகப் பராமரிக்கவும். சிகிச்சை பெற வருகைதருபவர்களுக்கு விரைவான சேவை வழங்குவதை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்திட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரேபிஸ் வெறி நோய் என்பது ரேபிஸ் வைரசினால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர்கொல்லி நோயாகும். இந்நோய், வைரஸ் பாதிக்கப்பட்ட மிருகங்களின் கடி மூலமாக, குறிப்பாக நாய், பூனை மற்றும் பிற விலங்குகள் அவற்றின் எச்சிலின் வழியே மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பரவுகிறது. ரேபிஸ் நோய் 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஒன்றாகும். ரேபிஸ் தாக்கிய பிராணியின் கடிக்குப் பின்னே முறையான தடுப்பு சிகிச்சை அளிக்கவில்லையெனில் உயிரிழப்பு ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாகும்.
சேலம் மாவட்டத்தில் 2024- ஆம் ஆண்டில் 37,023 பேர் நாய், பூனை மற்றும் இதர விலங்குகள் மூலம் கடிக்கு உள்ளாகியுள்ளனர். இவற்றுள் 6 பேர் நாய் கடிக்கு உரிய சமயத்தில் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாததாலும், நான்கு தவணை தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொள்ள தவறியதாலும் உயிரிழந்துள்ளனர், நடப்பாண்டில் இதுவரை 7,572 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


