ட்ரெண்டிங்

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்- மா

 

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 5,56,199 நபர்கள் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கடைக்கோடி கிராமத்துக்கும் மருத்துவ சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் வயதானவர்கள் மற்றும் எழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகளை அவர்களது இல்லம் தேடி கொண்டு செல்லும் முன்னோடி திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05- ஆம் தேதி அன்று தொடங்கிச் செயல்படுத்தி வருகிறார்.

 

மக்களைத் தேடி மருத்துவம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது, 45 வயதுக்கு மேற்பட்ட இரத்த அழுத்த நோயாளிகள். புற்றுநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைப் பெறுபவர்களுக்குரிய மருந்து, மாத்திரைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்கள்.

 

 

இத்திட்டத்தின்கீழ், ஒன்றியம் மற்றும் மண்டல வாரியாக மருத்துவக் குழு அமைக்கப்பட்டு மருத்துவப் பணிகளைச் செய்து வருகிறார்கள். இதில் பெண் செவிலியர் ஒருவர், ஒரு தன்னார்வலர், ஒரு இயன்முறை மருத்துவர் எனக் குழுவாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் வட்டார அளவில் 24 நோய் தடுப்பு சிகிச்சை செவிலியர்கள் மற்றும் 24 இயன்முறை மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று நோய் தடுப்பு சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சைகளை வழங்குகிறார்கள். மேலும், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படும் மகளிர் உதவிக்குழுக்களில் உள்ள 485 மகளிர் சுகாதாரத் தன்னார்வலர்கள் சுகாதாரத் துணை மையங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

மேலும், இதுதவிர மருத்துவ மையங்களில் தரத்திற்கேற்ப தொற்றா நோய்களுக்கான மருத்துவ சேவையை வழங்க ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு செவிலியர், அரசு மருத்துவமனைகளில் 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 2 செவிலியர்கள் வீதம் மொத்தம் 120 செவிலியர்கள் முதன்மை, இடைநிலை மற்றும் 3ஆம் நிலை மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 29,49,013 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 2,36,154 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்திற்காக சிகிச்சையும், 1,48,485 நபர்களுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும், 1,30,512 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும், 14,897 நோய் ஆதரவு சிகிச்சையும் மற்றும் 26,147 நபர்கள் இயன்முறை சிகிச்சையும் என மொத்தம் 5,56,199 நபர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம்

சேலம் மாவட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

 

மேலும், இத்திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற்று வரும் ஒவ்வொரு நோயாளியின் விபரமும், சமுதாய நலப் பதிவேட்டில் பதியப்பட்டு அவர்களுடைய உடல்நிலை தொடர்ந்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.