ட்ரெண்டிங்

பல்கலை. துணைவேந்தர் மீதான விசாரணைக்கு தடை!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜன.19) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, "பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் நடவடிக்கைகளில் குற்றநோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை; ஆவணங்களை சரிபார்த்ததில் குற்றநோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை" என்று குறிப்பிட்ட நீதிபதி துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளார். அத்துடன், தடையை நீக்க வேண்டும் என்றால், தனி மனுவைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

 

அதேபோல், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் நேரில் ஆஜராகவுள்ளதால், விசாரணையைத் தள்ளி வைக்க அரசு தரப்பில் கோரப்பட்ட நிலையில், துணைவேந்தர் தொடர்ந்த வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.