தாரமங்கலத்தில் உள்ள பழமையான கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தை அறிவியல் பூர்வமாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 13- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. இங்கு பாதாள லிங்கமும் உள்ளது. இதனால் பண்டிகை காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருக்கும். ஏராளமான பூஜைகள், வழிபாடுகளும் நடக்கும்.
ஆனால் இந்த கோயிலின் சொத்துக்கள் மட்டும் முறையாகப் பராமரிக்கப்படுவது இல்லை. இதுகுறித்து 2015- ஆம் ஆண்டே அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இந்த மனுவின் அடிப்படையில் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் படி தாசில்தார் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில் கோயிலில் உள்ள தெப்பக்குளம் அரசு புறம்போக்கு தெப்பக்குளம் என்று கூறப்பட்டு இருந்தது.
உடனே இந்த தெப்பக்குளத்தை கோயிலுக்கு சொந்தமானது என்று ஆவணங்களைத் திருத்த வேண்டும் என கிகாரிக்கு மனு கொடுத்தேன். இந்த தெப்பக்குளம் முறையாகப் பராமரிக்கப்படாமல் பாழடைந்து கிடப்பதால் எந்த திருவிழாவும் இங்கு நடத்த முடியவில்லை. இது குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நேரில் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பல்வேறு சட்டங்களின் படி குளங்களுக்கு அரசு தான் உரிமையாளர். அதனால் இதுப்போன்ற தெப்பக்குளத்தை பழமை மாறாமல் அரசு பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த கோவில் தெப்பக்குளத்தை நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தும், அவற்றை முறையாக பராமரிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. மனுதாரர் இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டுகள் ஆக்கிரமித்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிகாரிகள் சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் தெப்பக்குளத்தை அறிவியல் பூர்வமாகவும், நிபுணர்கள் குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையிலும் பராமரிக்க வேண்டும். அணைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் 3 மாதங்களுக்கு எடுக்க வேண்டும் இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


