ட்ரெண்டிங்

சுதந்திர போராட்டம் குறித்த அருங்காட்சியகம்- ஆட்சியர் அழைப்பு! 

பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நன்கொடையாக வழங்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 75- வது சுதந்திர தின விழா உரையின் போது அறிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹீமாயுன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். 

சேலம் மாவட்ட பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சேலம் மாவட்ட அருங்காட்சியகத்திற்கு நேரடியாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையர் அவர்களால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம் பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக
வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், சாரதா கல்லூரி சாலை, பேர்லெண்ட்ஸ். சேலம்-636016 என்ற முகவரியிலோ, 94434-78024 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது govtmuseumsalem2@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.