ட்ரெண்டிங்

அனைவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும்- சேலம் ஆட்சியர் வேண்டுகோள்! 

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்களிக்க வருகைதரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் போதிய குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், கோடைவெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தற்காலிக நிழல் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அடையாளச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை, வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகங்கள். ஓட்டுநர் உரிமம், மத்திய மாநில அரசுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் பணியாளர் அடையாள அட்டை வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேசிய மக்கட்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை நாடாளுமன்ற, சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள், இயலாமைக்கான தனித்துவமான அட்டை என தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்காளர்களுக்கான அடையாளச் சான்றாகக் கொண்டு வாக்களிக்கலாம். 

மேலும், பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம். பூத் சிலிப் வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது.

மக்களவைப் பொதுத்தேர்தலுக்குகான வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்திட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்டத் தேர்தல் தெரிவித்துள்ளார்.