ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 4,034 கோடியை வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஜிஎஸ்டியை விடுவிக்கக் கோரியும் இன்று (மார்ச் 29) சேலம் மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் மேற்கு மாவட்டம், சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் 100 நாள் வேலையில் பயன்பெற்று வரும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். 

நங்கவள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சூரப்பள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதியும், அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றியம், காரிப்பட்டி ஊராட்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அதேபோல், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, நங்கவள்ளி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர், இளம்பிள்ளை, இடங்கணசாலை, எடப்பாடி, தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், சிந்தாமணியூர் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வின் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள், வார்டு, பேரூராட்சி, ஒன்றிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.