சேலத்தில் போதை மாத்திரைகளை ரூபாய் 20- க்கும் வாங்கி ரூபாய் 300- க்கு விற்பனை செய்த 3 மருந்துக் கடைகளின் லைசென்ஸ் ரத்துச் செய்ய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மன்னார்பாளையம் பிரிவு ரோடு பகுதியில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்யப்படுவதாக வீராணம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகம்படும்படி ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அல்லிக்குட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், இவர் வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்ததும் இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொண்டு போதையில் இருந்ததும் தெரிந்தது. மேலும் இவருக்கு இந்த போதை மாத்திரையை சப்ளை செய்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் சேலம் அழகுசமுத்திரத்தைச் சேர்ந்த கோகுலராஜ் (வயது 29), பாகல்பட்டியைச் சேர்ந்த தினேஷ் கண்ணன் (வயது 27), அமரகுந்தியைச் சேர்ந்த கோகுலன் (வயது 26) என்பதும் அவர்கள் அப்பகுதியில் மருந்துக் கடை வைத்துள்ளதும் தெரிய வந்தது. இவர்கள் பஞ்சாப், சண்டிகரில் உள்ள வலி நிவாரணி மாத்திரைத் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து ஆன்லைனில் இந்த போதையை மாத்திரையை ஒன்று ரூபாய் 20- க்கு வாங்கி ரூபாய் 300- க்கு விற்றுள்ளனர்.
மேலும் இவர்கள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளிகளைக் குறி வைத்து விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரை, ஊசி, 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இது பற்றி வழக்குப்பதிவுச் செய்த வீராணம் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, போதை மாத்திரை விற்ற இவர்களது மருந்துக் கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், இவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பஞ்சாப், சண்டிகரில் தனியார் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மேலும் 3 மருந்துக் கடைகளின் லைசென்ஸை ரத்துச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


