ட்ரெண்டிங்

ஆளுநரிடம் கேள்வி எழுப்பியவரை நீக்கக் கோரி பா.ஜ.க. மனு!

நீட் தேர்வுக்கு எதிராக ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய நபரை நீக்கக் கோரி சேலம் இரும்பாலையின் மனிதவளத்துறை அலுவலகத்தில் பா.ஜ.க.வின் சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் 12- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுடனும், அவர்களின் பெற்றோர்களுடனும் கலந்துரையாடும் நிகழ்ச்சி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.

அப்போது, சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை அம்மாசியப்பன், ஆளுநரிடம் நேருக்கு நேராக, "தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். நீட் தேர்வுக்கு நான் எப்போதும் தடைக் கொடுக்க மாட்டேன். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்களிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யலாம்". இவ்வாறு ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் பேச்சு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே வந்த அம்மாசியப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். 

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான சேலம் இரும்பாலையில் அம்மாசியப்பன் பணிப்புரிந்து வருகிறார். இதையடுத்து, சேலம் இரும்பாலையில் உள்ள மனிதவளத்துறை அலுவலகத்தில் இரும்பாலையின் நிர்வாக செயல் இயக்குநரை இன்று (ஆகஸ்ட் 18) காலை 10.00 மணிக்கு சந்தித்த, பா.ஜ.க.வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையிலான பா.ஜ.க.வினர், அம்மாசியப்பனை பணி நீக்கம் செய்யக்கோரி மனு அளித்தனர். 

அந்த மனுவில், "மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளில் பேட்டிக் கொடுத்துள்ளார் அம்மாசியப்பன். அத்துடன், தொலைக்காட்சி விவாதங்கள், அரசியல் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். இது மத்திய அரசின் ஊழியர் சட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, அம்மாசியப்பனை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.