ட்ரெண்டிங்

கர்நாடகாவில் முழு அடைப்பு- சேலத்தில் இருந்து ஓசூர் வரை மட்டுமே பேருந்து சேவை.... பயணிகள் கடும்

கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, தமிழகம்- கர்நாடகா இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரை நிறுத்த வலியுறுத்தி கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு 1900- க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.

இதனால் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உள்பட எட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக, தமிழகத்தில் கர்நாடாகவுக்கு செல்லக் கூடிய தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மாநில எல்லையான ஜூஜூ வாடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் மக்கள் அவதியடைந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில், சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு அதிகளவில் தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக, சேலத்தில் இருந்து ஓசூர் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் வேலைக்கு செல்வோர், மருத்துவமனைச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மேட்டூர், கொளத்தூர் வழியாக கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூருக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும், தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, பல கிலோ மீட்டருக்கு நடந்து செல்லும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  

சரக்கு லாரிகள், கனரக வாகனங்கள் என தமிழக எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றன.