ட்ரெண்டிங்

திருத்தேரில் ஆடி அசைத்து வந்த அழகிரிநாதர்....கோலாட்டமாடி வரவேற்ற பெண்கள்! 

சேலம் மாநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானதாக உள்ளது வைகாசி விசாகத் திருத்தேரோட்டம். 

அந்த வகையில், வைகாசி விசாகத் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூன் 10) கோட்டை ஸ்ரீ அழகிரிநாதர் திருக்கோயில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

திருத்தேரில் அமர்ந்தவாறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அழகிரிநாதர் சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் ஆடி அசைந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடைவீதி ராஜகணபதி திருக்கோயில் தேர் நிலையில் இருந்து தொடங்கிய திருத்தேரோட்டம் முதல் அக்ரஹாரம், பட்டைக்கோவில், இரண்டாவது அக்ரஹாரம், கடைவீதி, கன்னிகாபரமேஸ்வரி திருக்கோயில் வழியாக மீண்டும் தேர்நிலையை அடைந்தது. 

திருத்தேர் முன்னாள் பெண்கள் கோலாட்டமாடியும், பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா...கோஷம் எழுப்பியும் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். திருத்தேரோட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர் வலம் வந்த பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதேபோல், பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். 

சமூக அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் சார்பில் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.