ட்ரெண்டிங்

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று மாலை நிறுத்தம்!

 

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று (ஜன.28) மாலை நிறுத்தப்படுகிறது. 

 

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் கடந்த ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதன்படி, ஜூன் 12- ஆம் தேதி முதல் ஜனவரி 28- ஆம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். 

 

பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். கடந்த ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால், 45 நாட்கள் தாமதமாக ஜூலை 28- ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், இன்று (ஜன.28) மாலை 06.00 மணிக்கு 184 நாட்களுக்கு பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வரை குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தேவைக்கு ஏற்ப அதிகபட்சமாக விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

கடந்த 184 நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு சுமார் 150.38 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகளில் உற்பத்திச் செய்யப்பட்டு வந்த 460 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.