சேலம் குமாரசாமிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார்.
பின்னர் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்து, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:-
தமிழகத்தில் அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றார்.
போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்க பல்வேறு செயல்திட்டங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகள் வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை அனைத்து பகுதிகளையும் பேருந்து சேவையால் இணைப்பதே அரசின் முக்கிய நோக்கம் என தெரிவித்த அவர், பொதுமக்கள் அதிகளவில் ஏசி பேருந்துகளில் பயணிக்கும் வகையில் புதிய ஏசி பேருந்துகளை வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
சேலம் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள ஏசி வசதிகளை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை வழங்க தேவையான வசதிகளை மேம்படுத்த அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



-SXgDfGgJfO.jpg)