சேலம்,ஆக.15 சுதந்திர தினத்தையொட்டி, சேலம் ஊராட்சி ஒன்றியம், மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பார்வையாளராக கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: வெளிப்படையான கிராம நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத்திட்டம், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மருத்துவ காப்பீட்டு திட்டம், செலுத்தும் சேவை மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
இந்த கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களால் பல்வேறு இனங்கள் குறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்குvஉத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இக்கிராம சபை கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) மதுமிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்யாணகுமார், ஜெயா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


