தேசிய சுற்றுலாத் தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம், வனத்துறை சுங்கச்சாவடி அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (ஜன.25) வழங்கி, அதன் பயன்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை உலகளவில் முக்கியச் சுற்றுலாத்தளமாக மேம்படுத்திடும் வகையில் சுற்றுலா கொள்கையை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக. தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத் தளங்களில் சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இன்றையதினம் ஜனவரி 25 தேசிய சுற்றுலா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தேசிய சுற்றுலா தினமானது உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த கருப்பொருள் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்கை எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாத்துறையில் மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கையின் காரணமாக கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிற்கு 28.40 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது அகில இந்திய அளவில் இரண்டாம் இடமாகும். அதேபோன்று ரூபாய் 9.63 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இது இந்திய அளவில் ஆறாம் இடமாகும். குறிப்பாக, கன்னியாகுமரி, இராமேஸ்வரம், மாமல்லபுரம், திருச்சி உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர். அதேபோன்று, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஏற்காடு ஏரியில் மிதக்கும் படகு உணவகம் தொடங்க ஏதுவாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் ஏற்காட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றின் பங்களிப்பை மேம்படுத்துவதில் சுற்றுலாவின் பங்கு முக்கியமானதாகும். இச்சிறப்பான தருணத்தில் அனைவருக்கும் தேசிய சுற்றுலா தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)