ட்ரெண்டிங்

டங்ஸ்டன் சுரங்க ரத்து- எம்.பி.க்கள் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சி!

 

தமிழ்நாடு அரசு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு, பொதுமக்களின் போராட்டம் காரணமாக மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் அமைப்பதற்கான ஏலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கனிம வளங்கள் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்று கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

அந்த வகையில், கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிலக்கரி, கனிம வளம் & எஃகு துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக் கூட்டத்தின் பொழுது டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து தொடர்பான செய்தியை அறிந்தவுடன் நிலைக்குழுவின் உறுப்பினர்களான மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

 

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சூளுரைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்து டங்ஸ்டன் சுரங்க ஏலம் உரிமத்தை ரத்து செய்ய அரும்பாடுபட்ட தி.மு.க.வின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாங்கள் இருவரும் நன்றி பாராட்டினோம் என்று சேலம் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.