ட்ரெண்டிங்

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெங்களூருவில் இருந்து ஓசூர், தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம் வழியாக கொச்சுவேலிக்கு இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 

இன்று (ஆகஸ்ட் 24) மதியம் 02.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06565) இரவு 07.55 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இரவு 08.00 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் ரயில் நாளை (ஆகஸ்ட் 25) காலை 07.15 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும். 

அதேபோல், மறுமார்க்கத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மாலை 06.05 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06566) மறுநாள் காலை 05.07 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், காலை 05.10 மணிக்கு தருமபுரி, ஓசூர் வழியாக காலை 11.00 மணிக்கு பெங்களூரூவைச் சென்றடையும். 

செகந்திராபாத்தில் இருந்து நாளை (ஆகஸ்ட் 25) மாலை 05.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 11.38 மணிக்கு சேலத்தை வந்தடையும். பின்னர், காலை 11.40 மணிக்கு புறப்படும் ரயில் ஈரோடு, திருப்பூர் வழியாக கொல்லம் சென்றடையும். 

மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 27- ஆம் தேதி இரவு 07.00 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக ஆகஸ்ட் 28- ஆம் தேதி காலை 05.07 மணிக்கு சேலத்தை வந்தடையும். பின்னர் காலை 05.10 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11.50 மணிக்கு செகந்திராபாத்தைச் சென்றடையும். 

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது". இவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.