ட்ரெண்டிங்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்- கெங்கவல்லியில் ஆட்சியர் ஆய்வு!

 

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் ஜன.22, ஜன.23 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் வகையில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கள ஆய்வின்போது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களின் இடங்களுக்கே சென்று, குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமானது, இன்றையதினம் காலை சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்தில் தொடங்கியுள்ளது. கெங்கவல்லி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

கெங்கவல்லி வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் இன்றைய தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 

அந்த வகையில், இன்றையதினம் கெங்கவல்லி வட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ஒதியத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு செய்து, உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, நடுவலூர் வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு தீ விபத்து மற்றும் தடுப்புப் பணிகளுக்கான பதிவேடுகள், இயற்கை இடற்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணியின்போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள் தீ தடுப்பு கருவிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும், நடுவலூர் வடக்கு கால்நடை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகக் கோப்புகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதேபோன்று, கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் கல்வித்திறன், வருகைப்பதிவேடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளின் பெயர் பதிவு செய்யும் அறை, ஆய்வகம், ஸ்கேன் சென்டர், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுப் பிரிவு, மக்களைத் தேடி மருத்துவம் பிரிவு போன்றவற்றில் ஆய்வு செய்து, மருத்துவமனையை தூய்மையாகப் பராமரிக்கவும், வெளிநோயாளிகள் சிகிச்சை பெற வருகை தரும்போது அவர்களுக்கு விரைவான சேவை வழங்குவதை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. 

 

மேலும், உள்நோயாளிகள் பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் மருந்தகம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. அதேபோன்று. இன்றைய ஆய்வின்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது மேல் நடவடிக்கைக்காக தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் இப்பகுதிகளில் தங்கி நாளைய தினம் அதிகாலை 6 மணி முதல் இவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பால் கொள்முதல் நிலையங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

இந்த ஆய்வின்போது, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.