ட்ரெண்டிங்

கட்சி பதவியை ராஜினாமா செய்தார் யுவராஜா! 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 22- ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கட்சியின் அனைத்து மட்டத்திலும் மறு சீரமைப்பு செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது. 

நான் கடந்த 10 ஆண்டு காலமாக இளைஞரணி மாநில தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த  தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக என்னுடைய மாநிலத் தலைவர் பதவியை கடந்த ஜூலை 16- ஆம் தேதி ஜி.கே வாசனை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினேன். தொடர்ந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக தலைவர் ஜி.கே வாசனின் தலைமையின் கீழ் பயணிப்பேன்.

அரசியலில் கடந்த 15 ஆண்டு காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக திரு.ஜி.கே வாசன் அவர்களின் ஆதரவோடு இரண்டு முறை 2009 மற்றும் 2012- ல் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பிறகு 2014- ல் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி மாநில தலைவராக 10 ஆண்டு காலம் செயல்பட்டு வந்துள்ளேன். 

கடந்த 15 ஆண்டு காலமாக இளைஞரணி செயல்பாட்டில் முழுவதுமாக என்னை ஈடுபடுத்தி கொண்டேன். கட்சிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் எடுக்கக்கூடிய முடிவுக்கு முன் மாதிரியாக இந்த ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.