ட்ரெண்டிங்

5 வெல்ல ஆலைகள் மீது வழக்குப்பதிவு!

 

சேலம் அருகே வெல்லத்தில் கலப்படமாக சர்க்கரையைச் சேர்க்க பதுக்கி வைத்திருந்த 5 ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டத்தில் 300- க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. வெல்லம் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகளையும், சர்க்கரையும் சேர்த்து வெல்லம் தயாரிப்பதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது. 

 

இதையடுத்து, தாரமங்கலம், ஓமலூர், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், வெல்லத்தில் கலப்படமாக சேர்க்க வைத்திருந்த 18 டன் சர்க்கரையை மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்தனர். 

 

மேலும் 4,000 கிலோ செயற்கை கலர் பவுடர்களையும், கலப்பட வெல்லம் 800 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இவற்றை பறிமுதல் செய்த 26 ஆலை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனிடையே, கலப்படமாக சர்க்கரை பதுக்கி வைத்திருந்த 5 ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். 

 

மேலும் 30- க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகளில் மாதிரி உணவு பரிசோதனை எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கலப்படம் என தெரிந்ததால், அந்த ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.