ட்ரெண்டிங்

மே 22- ஆம் தேதி தொடங்குகிறது ஏற்காடு மலர்க்கண்காட்சி! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47- வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வரும் மே 22- ஆம் தேதி புதன்கிழமை அன்று முதல் மே 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப தலைமையில் மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று. இந்த ஆண்டு 47- வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வரும் மே 22- ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்கி, மே 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

47- வது ஏற்காடு கோடை விழாவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலர் அலங்காரம் மற்றும் வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைத்திடவும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஏற்காடு பகுதியைச் சுற்றியும் தூய்மைப் பணியினை மேற்கொள்ளவும், தடையற்ற குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொள்ளவும், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு உணவுத் திருவிழா நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஏற்காட்டிற்கு செல்லும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை பலகைகளை தேவைக்கேற்ப கூடுதலாக அமைத்திடவும். இரவு நேரங்களிலும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலைத் தடுப்புகளில் வண்ணம் தீட்டுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள், படகுப் போட்டிகளை நடத்திடவும், உள்ளாட்சித்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும். தேவைக்கேற்ப வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சமூக நலத்துறையின் சார்பில் குழந்தைகள், மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அடுப்பில்லா சமையல், பராம்பரிய உணவுகளைக் கொண்டு சமையல் போட்டிகள் நடத்திடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் எற்பாடு செய்திடவும். சுகாதாரத் துறையின் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையின் சார்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பு குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு எற்படுத்தவும், தேவையான இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்கிடவும் ஏற்பாடு செய்திட அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாகக் கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அமயில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி, மாநகர நல அலுவலர் மரு.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.