விளைச்சல் குறைவு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் சேலத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், தம்மம்பட்டி உள்பட தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பல நூறு ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதை தவிர கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த நவம்பரில் பெய்த மழையால் சின்ன வெங்காயம் பயிர்கள் மழையால் மூழ்கியது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் வழக்கமாக வரும் வரத்தில் 50% குறைந்துள்ளது. இதன் காரணமாக, அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 35 முதல் ரூபாய் 40- க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூபாய் 72 முதல் ரூபாய் 75 ஆக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விலை குறையும் என்று கூறுகின்றனர்.


-SXgDfGgJfO.jpg)