ட்ரெண்டிங்

கூண்டில் சிக்கிய சிங்கவால் குரங்கு....ரயில் பயணிகள் மகிழ்ச்சி! 

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிங்கவால் குரங்கு நுழைந்துள்ளது. அதைத் தொடர்ந்து. ரயிலுக்காகக் காத்திருக்கும் பயணிகள், ரயில் நிலையத்திற்கு வந்துச் செல்லும் நபர்கள், பிளாட் பாரத்தில் தனியாக இருக்கும் நபர்களிடம் இருந்து உடமைகள், தின்பண்டங்களைப் பறித்துச் சென்றது சிங்கவால் குரங்கு. 

மேலும், பயணிகளையும் அச்சுறுத்துவது மட்டுமின்றிக் கடித்தும் குரங்கு வந்துள்ளது. குரங்கு கடிதத்தில் சுமார் 10- க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர், குரங்கை விரட்ட முயன்றும் பயனளிக்கவில்லை. 

இதையடுத்து. ரயில் நிலையத்தில் சிங்கவால் குரங்கு ஒன்று, அட்டகாசம் செய்து வருவதாகவும், கூண்டு வைத்து பிடிக்குமாறும் சேலம் சரக வனத்துறையினருக்கு ரயில் நிர்வாகத்தினர், ரயில்வே காவல்துறையினர் புகார் அளித்திருந்தனர். 

அதனைத் தொடர்ந்து, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் உத்தரவின் பேரில், 2 கூண்டுகளைக் கொண்டு வந்து ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட் பார்மில் வைத்தனர். கடந்த 2 நாட்களாகக் கூண்டுக்கு அருகே வந்து போக்குக்காட்டி வந்த குரங்கு நேற்று (ஜூலை 02) மாலை கூண்டில் சிக்கியது. இதனால் ரயில் பயணிகள், காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். 

பிடிப்பட்ட குரங்கு அடர்ந்த சேர்வராயன் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.