ட்ரெண்டிங்

தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!

 

தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் 2ஆவது நாளாக நீடிக்கிறது.

 

ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் (ஜன.08) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. சங்கங்கள் பங்கேற்கவில்லை. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. அறிவித்துள்ளது.

 

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் முழுமையான பேருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவிருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இன்று (ஜன.10) காலை 07.00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 97.87% பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 13,782 பேருந்துகளில் 13,489 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

விழுப்புரம் கோட்டத்தில் 99.10%, சேலம் கோட்டத்தில் 97.61%, கோவை கோட்டத்தில் 95.56%, கும்பகோணம் கோட்டத்தில் 97.56%, மதுரை கோட்டத்தில் 98.71%, நெல்லை கோட்டத்தில் 99.28% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.