ட்ரெண்டிங்

சாலை வளைவுகளில் ரப்பர் ரோலர் தடுப்புகள்!

 

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் விபத்தைத் தடுக்கும் வகையில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

 

ஏற்காடு சேலம் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களில் முதலிடம் வகிக்கிறது. இங்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 

 

ஏற்காட்டில் படகு இல்லம், ஏரி பூங்கா, மான் பூங்கா, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஏற்காடு மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 

 

ஏற்காடு மலைப்பாதையில் ஏதாவது ஒரு விபத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏற்காடு மலைப்பாதையில் வளைவு மற்றும் அதிக சரிவு உள்ள பகுதிகளில் ரப்பர் ரோலர் கேஸ் தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மலைப்பாதையில் 7- வது கொண்டை ஊசி வளைவு, 16, 19- வது கொண்டை ஊசி வளைவுகளில் ரப்பர் ரோலர் கேஸ் தடுப்புகளை அமைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், விபத்துக்கள் அதிகம் ஏற்படும் இடங்களில் முதல் கட்டமாக ஆறு இடங்களில் ரோலர் கேஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு படிப்படியாக ரப்பர் ரோலர் கேஸ் தடுப்புகள் அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.