ட்ரெண்டிங்

கார் மோதியதில் பெண் உயிரிழப்பு!

 

சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் வாகனங்கள் மிகுந்து பரபரப்பாகக் காணப்படும். பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து இன்று (ஜன.20) மக்கள் வேலைக்கு திரும்பினர். அதேப்போல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். 

இந்த சூழலில், இன்று காலை சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 55) என்ற பெண் மீது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் மோதியது. 

தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற கர்நாடகா பதிவெண் கொண்ட காரை அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்து கருப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த கருப்பூர் காவல்துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக, சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  


கார் மோதி விபத்து.
 பெண் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. கர்நாடக பதிவின் கொண்ட காரினை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரும் ஒப்படைத்தனர்