ட்ரெண்டிங்

கோட்டை அழகிரிநாதர் கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு தீவிரம்! 

சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

சுமார் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் வரும் ஏப்ரல் 20- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே கோபுரத்திற்கு வர்ணம் பூசுதல், உள் பிரகார கல் மண்டபம், தூண்கள் புதுப்பித்தல் மற்றும் யாக சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. 

மேலும், கும்பாபிஷேகத்தன்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரத்தின் மேல் பகுதியில் கலசங்கள் வைக்கவும், புனிதநீர் எடுத்துச் செல்ல வசதியாக கம்புகளால் தடுப்புகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி தீவிரமாக நடந்து வருகின்றன.