சேலத்தில் மளிகைப் பொருட்கள் சீசன் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பாண்டில் திடீர் விலையேற்றத்தால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவது சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை வர்த்தக சந்தை. தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான இராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் முதல் காலாண்டில் செவ்வாய்ப்பேட்டைக்கு படையெடுப்பது வழக்கம். புதிய மளிகைப் பொருட்கள் வரத்து காரணமாக, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரை மொத்த விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு மல்லி, மிளகாய் உள்ளிட்டப் பொருட்களும், பருப்பு வகைகள் ரவை, மைதா உள்ளிட்டப் பொருட்களின் விலையும் குறைவாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். செவ்வாய்ப்பேட்டை சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை ஒப்பிடும்போது மற்ற மாவட்டங்களில் சில்லறை விற்பனை விலை அதிகளவில் இருக்கும் என்பதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் இங்கு வந்து மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் மளிகைப் பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் விற்பனையாளர்களுக்கு ஏமாற்றம் தான் என்றும், இதற்கு திடீர் விலையேற்றமே காரணம் என்றும் கூறப்படுகிறது. கூலி, போக்குவரத்துச் செலவு, சுங்கக்கட்டணம் காரணமாக, இனி வரும் நாட்களில் மளிகைப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


