சேலம் மாவட்டம், மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டி நிரம்பும் நேரங்களில் அணையில் இருந்து தண்ணீரை நீரேற்றும் முறை மூலம் வறண்ட ஏரிகளுக்கு அனுப்பி வைக்கும் சரபங்கா நீரேற்று திட்டம் கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மேட்டூர் அணை 120 அடியை எட்டும் போது அணையின் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து குழாய்கள் மூலம் வறண்ட ஏரிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
இதன் அடிப்படையில், கடந்த டிச.31- ஆம் தேதி இரவு மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து, கடந்த ஜன.03- ஆம் தேதி முதல் சரபங்கா திட்டத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அனுப்பும் பணி தொடங்கியது.
இதனிடையே, அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு தண்ணீர் அனுப்பும் பணி நேற்று (ஜன.19) முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று (ஜன.20) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.64 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



-SXgDfGgJfO.jpg)