ட்ரெண்டிங்

சேலம்- உளுந்தூர்பேட்டை இடையே புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்!

 

சேலம்- உளுந்தூர்பேட்டை இடையே விபத்துக்களைக் குறைக்க ரூபாய் 262 கோடியில் 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களை இணைத்து சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2008- ஆம் ஆண்டில் இருந்து பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 2013- ஆம் ஆண்டு நிறைவுப் பெற்றது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் சேலம்- உளுந்தூர்பேட்டை வரை சுமார் 136 கிலோ மீட்டர் உள்ளது. இதில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைக்கப்பட உள்ளது. 

 

இந்த சாலையில் சேலத்தில் மட்டும் சேலம் உடையாப்பட்டியில் இருந்து 6- வது மைல் வரை இருவழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாழப்பாடி நகர்ப்புற பகுதி முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரைக்கும் புறவழி இருவழிச்சாலையாகவும், ஆத்தூர் பகுதியில் செல்லியம்பாளையத்தில் இருந்து துலுக்கனூர் வரைக்கும் புறவழிச்சாலையாகவும், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை வரைக்கும் இதே போன்று நகர்ப்புற பகுதிகளில் சுமார் 8 இடங்களில் புறவழி இருவழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

அதன் தொடர்ச்சியாக, சேலம்- உளுந்தூர்பேட்டை இடையே புறவழிச்சாலை பிரியும் இடங்களில் விபத்துக்கள் நடக்கும் பகுதிகள் என 13 இடம் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் ரூபாய் 262 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் உடையாப்பட்டி, ராமலிங்கபுரம், வாழப்பாடி, தியாகதுருவம், செம்பியன் மகாதேவி, எலவனாசூர் கோட்டை, காட்டுக்கோட்டை, தலைவாசல், புத்திரக்கவுண்டம்பாளையம், அம்மம்பாளையம், மும்முடி, மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி உள்ளிட்ட 13 இடங்களில் தற்போது மேம்பால கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.