பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த ஜனவரி 16- ஆம் தேதி அன்று நடைபெற்றது. 9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கொடி அசைத்து துவங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
வாடிவாசலில் சுமார் 1,000- க்கும் மேற்பட்ட காளைகளும், 500- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பல்வேறு குழுக்களாக கலந்து கொண்டனர். சீறி பாய்ந்தக் காளைகளை ஏர் தழுவிய காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சேலம் அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் பாகுபலி காளை அவிழ்த்துவிட்ட போது, அந்த காளை மாடுபிடி வீரர்களை அலறவிட்டது. இதையடுத்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகளில் சிறந்த காளையாக பாகுபலி காளை தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக டிராக்டர் மற்றும் நினைவுப் பரிவு வழங்கப்பட்டது.
டிராக்டருடன் சொந்த ஊருக்கு திரும்பிய பாகுபலி காளைக்கு அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட்டில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகளை வெடித்தும், மேள, தாளங்கள் முழங்கவும் ஊர்வலமாக அழைத்துச் சென்று உற்சாக வரவேற்பை அளித்தனர். வழிநெடுகிலும் இருந்த பொதுமக்கள் வெற்றி வாகை சூடிய காளையைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.


