ட்ரெண்டிங்

ரேபீஸ் வெறிநாய்கடி தடுப்பூசி முகாம்! 

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 80,000 தெரு நாய்கள் உள்ளன. தெருநாய்களுக்கான இனப்பெருக்க மையம் (ABC Center) வாய்க்கால் பட்டறையில் செயல்பட்டுகொண்டு இருக்கின்றது. இம்மையத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும், நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது இம்மையத்தின் 800 நாய்களுக்கு சராசரியாக இனபெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுநாள்வரை மாநகராட்சிப் பகுதியில் 12,669 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசி ஒரு வருட இடைவேளையில் ஒவ்வொரு வருடமும் செலுத்தினால் நாய்களை ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாக்கலாம். 

அதனை கருத்தில் கொண்டு ஒரு வருடத்திற்குள் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் மாநகராட்சியும், Rain என்ற தொண்டு நிறுவனம் இணைந்து இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை இன்று புலிக்குத்து தெருவில் உள்ள சேலம் குகை பொது நலப்பிரியர் சங்க வளாகத்தில் மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மோகன், பொது சுகாதார குழுதலைவர் சரவணன், உதவி ஆணையாளர் வேடியப்பன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுகாசினி, சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்குமார், சித்தேஸ்வரன், தன்னார்வலர் வித்யா லஷ்மி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.